ஞாயிறு, 23 அக்டோபர், 2011

கிழக்குத் துருக்கியை உலுக்கிய பாரிய பூகம்பம்


வான் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து பலர் காயமுற்றதுடன் நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஜீ. எம். டி. நேரம் 10:41 அளவில் ஏற்பட்ட இப்பூமி அதிர்ச்சி 7.2 ரிச்டர் அளவுடையது என் ஆரம்ப ஆய்வுகள் கூறுகின்றன. வான் நகரின் வடக்கே அமைந்துள்ள தபனில் கிராமம் இதன் மையப் புள்ளியாக அமைந்திருந்தது.
துருக்கியின் கந்தில்லி ஆய்வகத்தின் மதிப்பீட்டின்படி 500 முதல் 1000 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவு பாதிப்பு ஈரான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஏர்சிஸ் நகர்ப்புறத்துக்கே ஏற்பட்டுள்ளதுடன் வான் நகரமும் கணிசமான பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளது.
பிரதிப் பிரதமர் பசீர் அதலே கருத்துத் தெரிவிக்கையில் வான் நகரில் 10 கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் ஏர்சிஸ் பகுதியில் 25 அல்லது 30 கட்டடங்கள் சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Anatolia செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி வான் நகரில் ஐம்பது பேராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
NTV ஒளிபரப்பு நிறுவனத்துடன் பேசிய எர்சிஸ் நகர மேயர் சுல்பிகார் “அதிக கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன, அதிகமானோர் பலியாகியுள்ளனர், சரியான எண்ணிக்கை தெரியவில்லை, நாங்கள் அவசர உதவிக்காக காத்திருக்கிறோம்” என்றார்.
முழு சேதத்தை மதிப்பிடுவதில் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NTVயுடன் பேசிய வான் நகர மேயர் பெகிர் கயா “மக்கள் பதற்றமடைந்துள்ளனர், தொலைத்தொடர்பு சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன, யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்றார்.
இராணுவம் தேடுதல் மற்றும் மீட்புப் படையணிகளை அனுப்புவதற்காகத் தயாராகி வருகிறது. புவியதீர்வைத் தொடர்ந்த சிறிய அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
வட மேற்கு ஈரானின் துருக்கியுடனான எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்ட இப்பூமி அதிர்ச்சி பிரதான நகரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புவித்தட்டுகளின் எல்லைக் கோடுகள் துருக்கியின் ஊடாகச் செல்வதால், சிறிய பூமி அதிர்வுகள் நாளாந்த நிகழ்வுகளாக இருப்பினும் 1999இல் இடம்பெற்ற இரண்டு பாரிய பூமி அதிர்ச்சிகள் வடமேற்குத் துருக்கியில் 20,000 க்கும் அதிகமானோரை பலிகொண்டிருந்தன. கடந்த மே மாதம் இதே பகுதியில் சிமாவில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியில் இருவர் பலியானதும் 79 பேர் காயமுற்றதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக