இலங்கையில் விலங்குகளை உணவாக உண்பதற்கெதிரான செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மனிதனையும் விலங்குகளையும் உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையையும் படைத்த இறைவன் அவையனைத்தும் மனிதனின் நன்மைக்காகவே படைக்கப்பட்டுள்ளன எனக்கூறுகின்றான்.
மனிதனை நல்லவற்றை உண்ணுமாறு கட்டளையிட்டுள்ள இறைவன் அவன் ருசியாக உணவுகளை உண்பதற்காக சில விலங்கினங்களின் இறைச்சியையும் உண்ணுவதற்கு அனுமதித்துள்ளான். இவ்வாறு ஆடு மாடு ஒட்டகம் கோழி மீன் கடலுணவகள் போன்ற உயிரினங்களை மனிதன் சாப்பிடுவதற்கு அனுமதித்துள்ளான். தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்றவற்றுக்கு வெட்டும் பற்களையும் கடவாய் பற்களையும் படைத்துள்ள இறைவன் மனிதனுக்கு மட்டும் வெட்டும் பற்களையும் வேட்டைப் பற்களையும் படைத்துள்ளான்
மாமிசங்களை கிழித்து உண்பதற்கு வசதியாகவே சில மனிதனுக்கும் புலால் உண்ணிகளுக்கும் வேட்டைப்பற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மனிதனுக்கு வெட்டும் பற்களையும் வேட்டைப் பற்களையும் படைத்து தாவரங்களையும் (மரக்கறிகளையும்) மாமிசத்தையும் சாப்பிட இறைவன் வழிவகுத்துள்ளான்.
உலகின் ஆதிமனிதன் ஆதம் நபிக்கு கூட விலங்குகளை உண்ண இறைவன் அனுமதித்திருந்தான். நூஹ் நபியுடைய வெள்ளப்பெருக்கினால் மிருகவினங்களில் ஒவ்வொரு ஜோடிகள் மட்டுமே மிஞ்சியதால் அவை பல்கிப் பெருகும் வரை சில காலங்கள் அவற்றை சாப்பிட தடை விதிக்கப்பட்டிருக்கலாம். இது ஆறாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு விடயமாக இருக்கின்றது. அதன் பிறகு வந்த எந்த தேவதூதர்களுக்கும் (நபிமார்களுக்கும்) விலங்குகளை சாப்பிட வேண்டாமென எந்தக் இறைக்கட்டளையும் வரவில்லை. அதிகமான நபிமார்கள் ஆடுகளை பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்த்தாகவே வரலாறு நமக்கு கூறுகின்றது. மூஸா நபி ஆடு மேய்த்த இடம் இன்றைய ஜோர்தானில் உள்ளது. அதே போன்று இபுறாகிம் நபி ஆட்டை அறுத்து பலியிட்ட இடம் மக்காவிலுள்ளது. முஹம்மது நபியவர்கள் மக்காவில் ஆடு ஒட்டகங்கள் போன்றவற்றை மேய்த்ததாக வரலாறுகள் கூறுகின்றது. ஈஸா (இயேசு)நபி பிறந்த இடமும் ஆட்டுத்தொழுவமாக (பைத்லகம்) இருப்பதாகவே கிறிஸதவர்கள் நம்புகிறார்கள். இதையே குர்ஆனும் உறுதிப்படுத்துகின்றது, எனவே ஆடு வளர்த்தல் வீட்டு விலங்குகளை வளர்த்தல் என்பது புராதன காலம் தொட்டே இருந்து வரும் ஒரு வழக்கமாக உள்ளது. பண்டைய மனிதர்களின் உணவாக பெரும்பாலும் இறைச்சியே காணப்பட்டுள்ளது. சில வேளைகளில் உணவாக தனியே இறைச்சியை மட்டும் உண்ற சமுதாயங்கள் உள்ளன.
இந்நிலையில் 2600 வருட வயதைக் கொண்ட பௌத்த மதத்தில் கூட ஆடு மாடு ஒட்டகம் கோழி போன்ற விலங்குகளை அறுத்து உண்பதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இந்து வேதங்களில் கூட இறைச்சியை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சியை உண்பதில்லை. இலங்கையிலுள்ள பௌத்தர்கள் தமது பெரும்பாலான மத வழிபாடுகளில் இந்துக்களை பின்பற்றுபவர்களாகவுள்ளார்கள். இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டு வந்த மகிந்த தேரரும் சங்கமித்தையும் மரணித்த போது அவர்களின் சடலங்கள் மிகிந்தலையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் அடக்கஸ்தலங்களின் மேல் தூபிகள் கட்டப்பட்டன. ஆனால் இன்று பௌத்தர்கள் இறந்தவர்களை எரிப்பதைக் காணலாம். இது இந்துக்களிலிருந்து பௌத்தர்களுக்கு வழிவந்த (காப்பியடித்த) ஒரு பழக்கம். இதைப் போன்று ஏராளமான விடயங்கள் இந்து சம்பிரதாயங்கள் பௌத்த மதத்தில் ஊடுருவியுள்ளன. தேவநம்பிய தீஸன் வேட்டையாடச் சென்ற சமயமே மகிந்த தேரரைச் சந்தித்து பௌத்தத்தை ஏற்றுக் கொண்டான் என்பதிலிருந்து அக்காலத்தில் இலங்கையில் மிருகங்களை உண்ணும் வழமை இருந்துள்ளது என்பது புலனாகின்றது.
இது இவ்வாறிருக்க இன்று இலங்கையில் மிருகங்களை அறுத்து உண்பதற்கெதிராக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குருநாகல் போன்ற இடங்களில் இறைச்சிக்கடைகள் அதிகாலையில் முற்றுகையிடப்பட்டு ஆடு மாடுகளை அறுப்பதை தடை செய்கின்றனர். இந்தச் செயற்பாட்டை சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வகுப்பார் செய்வதால் மக்கள் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது. மாடுகள் வாகனங்களில் ஏற்றி வரும் போது பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு மதம் என்ற பெயரில் இம்மதத்தில் கூறப்படாத பல விடயங்களுக்கு மதச்சாயம் பூசப்பட்டு இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கியாளப்படுகிறார்கள்.
இறைச்சிக்காக ஆடு மாடு ஒட்டகம் கோழி போன்ற விலங்குகளை வளாப்பது உலகில் பிரபல்யமான ஒரு கைத்தொழிலாக உள்ளது. உலகில் இறைச்சிக்காக ஆடு மாடுகளை வளர்ப்பதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. கனடா பிரித்தானியா ஹொலன்ட் நோர்வே அவுஸ்திரேலியா நியுசிலாந்து போன்ற நாடுகளிலும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுவதுடன் அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அகிம்சா தேசமான இந்தியாவிலிருந்து கூட ஆடுகளும் மாடுகளும் அறுக்கப்பட்டு இறைச்சிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. உலகம் முழுவதும் இறைச்சியடிக்கும் தொழிலில் பல மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுடைய ஜீவனோபாயம் அத்தொழில்களில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே நடக்கின்றது.
அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 900 கோடி விலங்குகள் அறுக்கப்படுகின்றன. அங்கு 5700 விலங்குகள் அறுக்குமிடங்களுள்ளன. இறைச்சியடித்தல் தொழிலில் 530000 பேர் ஈடுபட்டுள்ளனர். வருடமொன்றுக்கு 65 கோடி விலங்குகள் கனடாவில் அறுக்கப்படகின்றன. அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வருடமொன்றுக்கு 30 கோடி விலங்குகளும் 400 கோடி கோழிகளும் அறுக்கப்படகின்றன. இலங்கையில் நாளொன்றுக்கு ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கோழிகளும் 120இக்கும் மேற்பட்ட மாடுகளும் 100 ஆடுகளும் அறுக்கப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம்களின் தேவைக்காக 40 சதவீதமான விலங்குகளே அறுக்கப்படுகின்றன. வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்காக 10 வீதமும் தமிழர் சிங்களவர்களுக்காக 50 வீதமும் அறுக்கப்படுகின்றன. ஆடு மாடு இறைச்சிக் கோழி வளர்ப்பில் இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களுமே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இறைச்சிக்காக விலங்குகளை வளர்த்து வாழ்க்கை நடத்தும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட சிங்களவர்களும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களும் உள்ளனர். ஆடு மாடுகளுக்க புண்ணாக்கு தவிடு புல் இலைகள் போன்றவற்றை விற்கும் தொழில்களில் இன்னொரு இலட்சம் இலங்கையர் குறிப்பாக சிங்களவர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
மேலும் இலங்கையில் தனியார்துறை சார்ந்த மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் பல உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மிருகத்தோல்கள் உள்நாட்டிலும் பாவனைக்கு எடுத்துக்கொளளப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால் அந்நிய செலாவணி வருமானமும் இலங்கைக்கு கிடைக்கின்றது. மேலும் மாட்டின் எலும்புகள் அறைக்கப்பட்டு அவை உரமாகவும் சில வேலைகளில் பாவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக இலங்கையில் மாடுகள் அறுக்கப்படுவது தடை செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றதாக இருப்பதுடன் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆடு மாடுகள் அறுக்கப்படவது தடை செய்யப்பட்டால் கோழி இறைச்சியும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அதுவும் ஓர் உயிர்தானே. அதே போன்று மீன்களை உண்ணுவதையும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு தடைகளை கொண்டு வருவதனால் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆடு மாடுகள் கோழிகள் வளர்க்கும் குடும்பங்களும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் தொழில்களை இழந்து வறுமையில் வாட வேண்டிய நிலையேற்படும். தோல் தொழில்சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிவரும்.
ஆடு மாடுகள் பெருகி புல்லுகளுக்கான பற்றாக்குறை ஏற்படும். இதனால் வயல் நிலங்களிலுள்ள நெற்பயிர்களையும் மரக்கறி கன்றுகளையும் அவை திண்ண எத்தனிக்கும். இதனால் இலங்கையில் அரிசி மரக்கறி போன்றவற்றுக்கு பஞ்சம் ஏற்படும். மறுபுறம் தற்போது வளர்ப்பிலுள்ள கோழிகள் நாற்பதாவது நாளில் கொல்லப்படாவிட்டால் அதற்கு உணவு கொடுக்கும் செலவு அதிகரித்து வளர்ப்பவர்கள் பெரும் சிக்கலில் மாட்டுவர். புரொய்லர் கோழிகள் போசாக்கு குறைந்தனவாக காணப்படுவதால் நாற்பது நாற்களுக்கு மேல் அவற்றை வைத்திருக்கும் போது அவை இறந்துவிடும். இலங்கையில் நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் கோழிகள் அவ்வாறு இறக்கக்கூடும். தற்போது வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏறக்குறைய முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட கோழிகள் அவ்வாறு இறக்கும் நிலமை உருவாகும். தொடர்ச்சியாக நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் கோழிகளை புதைத்தாலோ அல்லது எரித்து அழித்தாலோ அதனால் சூழல் மாசடைந்து மனிதர்கள் வாழ முடியாத நிலமை ஏற்படும். ஒரு புறம் ஆடு மாடுகள் பெருகி பஞ்சம் மறுபுறம் நோய் போசாக்கு குறைவுகளினால் மனிதர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். இலங்கைக் கடலிலுள்ள மீன்களை நாம் பிடிக்காவிட்டால் அயல் நாடுகள் வந்து எமது கடலில் மீன்களை பிடித்துச் செல்லும் நிலமை உருவாகும். இதனால் மீனவத் தொழில் புரியும் ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்படையும். பஞ்சம் நோய்கள் போன்ற காரணங்களினால் இலங்கை இன்னொரு சோமாலியாவாக உருவாகும்.
ஆடு மாடு கோழி இறைச்சி போன்றவற்றை உண்பதற்கு தடைவிதிக்கும் செயற்பாடு நமது படுகுழியை நாமே வெட்டும் செயற்பாட்டுக்கு உவப்பானது. இவ்வாறான ஒரு திட்டம் 1959ஆம் ஆண்டு சீனாவில் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில் காகங்கள் பெரும் பிரச்சினையாக காணப்பட்டதால் கண்ட இடத்தில் காகத்தை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால் சீனாவில் காகங்களே இல்லாத நிலமை உருவானது. ஆனால் அடுத்த இரண்டாவது ஆண்டில் சீனாவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதை ஆராய்ந்த அறிஞர் குழு காகங்களை அழித்ததன் விளைவாக எலிகள் பல்கிப் பெருகி களஞ்சியசாலைகளில் அரிசி போன்ற உணவுப்பதார்த்தங்களை தின்று தள்ளியதால் தான் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறியது. உடனடியாக அண்டை நாடுகளிலிருந்து காகங்கள் சீனாவுக்கு கொண்டுவரப்பட்டன. அவை எலிகளை வேட்டையாடி அடுத்த இரண்டாண்டகளுக்குள் நிலமையை சுமூகமாக கொண்டுவந்தன.
ஆடு மாடு விவகாரம் கடவுளின் அத்தாட்சியாகவுள்ளது, பூனைகளும் நாய்களும் பன்றிகளும் வருடத்துக்கு ஆறு தடவைக்கு மேல் குட்டிகளை ஈனுகின்றன. ஒவ்வொரு சூழிலும் மூன்றுக்கு குறையாத குட்டிகளை அவை பெற்றெடுக்கின்றன. அவற்றை யாரும் அறுப்பதும் கிடையாது. ஆனால் அவை எங்கும் பட்டியாக வாழ்வதில்லை. ஆனால் ஆடு மாடுகள் வருடத்துக்கு ஒரு முறையே குட்டிகளை ஈனுகின்றன. உலகெங்கினும் வருடமொன்றுக்கு 1500 கோடிக்கு மேற்பட்ட ஆடுகள் மாடுகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் ஆடு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததாக வரலாறு கிடையாது. மேலும் ஆடுகளும் மாடுகளும் பட்டி பட்டியாக உலகெங்கும் காணப்படுகின்றன. இது எவ்வாறு சாத்தியம் என்றால் அது தான் இறைவனின் பரக்கத் எனும் விஸ்தீரணமாகும்.
உணவுச் சங்கிலியில் ஆடு மாடுகள் புல்லை மேய்கின்றன. மனிதன் அவற்றை உண்கின்றான். ஆடு மாடுகள் அறுக்கப்படுவதால் குறைவு ஏற்படவதில்லை. மாறாக மறுபுறம் அவை பெருகிக் கொண்டேயுள்ளன. இன்றைக்கு இருபது வருடத்துக்கு முன்பு இலங்கையில் ஒரு கோடி இருபது இலட்சம் பேர் வாழ்ந்தனர். இன்று இரண்டு கோடிப் பேர் வாழ்கின்றனர். இவ்வளவு சனத்தொகை பெருகியும் பாலுக்கோ அல்லது இறைச்சிக்கோ இலங்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? இல்லையே. அதே போன்று இருபது வருடத்துக்கு முன்பு 400 கோடியாகவிருந்த உலக சனத்தொகை இன்று 700 கோடியாகியுள்ளது. உலகில் எங்காவது பாலுக்கும் இறைச்சிக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றதா?. பாலைவனப் பிரதேசமான சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடார் ஓமான் போன்ற நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை கூட நியுஸிலாந்தில் மிதமிஞ்சி உற்பத்தியாகும் பால்மாவை இறக்குமதி செய்கின்றது. அவுஸ்திரேலியாவும் நியுஸிலாந்தும் ஆண்டொன்றுக்கு முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட ஆடுகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. மேற்கவ் என்ற வியாதி பரவிய காலத்தில் மில்லியன் கணக்கான மாடுகள் கொன்று எரிக்கப்பட்டன. இவற்றினால் மாட்டிறைச்சிக்கு பஞ்சம் ஏற்படவில்லை. எனவே உலக நாடுகளில் தேவைக்கு மித மிஞ்சியதாகவே உற்பத்திகள் இடம்பெறுகின்றன. வீணாக பிரச்சினைகளை உருவாக்கி ஆடு மாடு அறுப்பை தடை செய்யுமளவுக்கு சிந்திப்பது என்பது 21ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத விடயமாகவுள்ளது என்பதை சம்பந்தப்பட்டவா;கள் உணரவேண்டும். (குறிப்பு: இக்கட்டுரையை சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட விரும்புபவர்கள் அவ்வாறு செய்யலாம்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக